சென்னை:'பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 16ம் தேதி திட்டமிட்டபடி செய்முறை தேர்வு நடத்தப்படும்' என, பள்ளிக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 தவிர மற்ற மாணவர்களுக்கு, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், வரும், 5ம் தேதி பொதுத் தேர்வு துவங்க உள்ளது. மே, 31 வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மே, 3ல் நடக்கவிருந்த மொழிப் பாடத் தேர்வுகள், மே, 31க்கு மாற்றப்பட்டுள்ளன.


முதல் கட்டமாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும், 16ம் தேதி செய்முறை தேர்வு நடத்தப் படுகிறது. இதற்காக, செய்முறை பயிற்சி வகுப்புகளை, நாளை கட்டாயம் நடத்த வேண்டும் என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:பிளஸ் 2 மாணவர்களுக்கு திட்டமிட்டபடி, மே, 5ல் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. செய்முறை தேர்வு, வரும், 16ம் தேதி முதல், திட்டமிட்ட காலத்தில் நடத்தப்படும்.கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில், பள்ளி ஆய்வகங்களில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி, மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.


தலைமை ஆசிரியர் மற்றும் பிற பாட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்கி, மாணவர்களின் செய்முறை தேர்வை, எந்த வித புகார்களுக்கும் இடமின்றி நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.