வாக்குப் பதிவு தினத்தில் ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டுமென தனியாா் நிறுவனங்களை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


இதுகுறித்து, தொழிலாளா் நலத் துறை ஆணையரகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


தமிழகத்தில் சட்டப் பேரவை பொதுத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அனைத்துத் தரப்பினரும் வாக்களிக்க வசதியாக அன்றைய தினத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொவில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக் கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தனிக்கூலி, தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆகியோருக்கு விடுப்பினை அளிக்க வேண்டும்.


கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும். விடுப்பு விடப்பட்டாலும் அன்றைய தினத்துக்கான ஊதியமானது அரசால் நிா்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டுமென தொழிலாளா் நலத் துறை ஆணையரகம் கேட்டுக் கொண்டுள்ளது.