சென்னை:பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் பள்ளிகள் செயல்படுமா என்பதை, பள்ளி கல்வி துறை அறிவிக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பிளஸ் 2 தவிர மற்ற வகுப்புகளுக்கு, காலவரையின்றி விடுமுறை விடப்பட்டுள்ளது.கல்லுாரிகள், பல்கலைகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும், இன்றைக்குள் நேரடி வகுப்புகள் மற்றும் நேரடி தேர்வுகளை முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.

பள்ளிகளில் ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2வுக்கு விடுமுறை விட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, சட்டசபை தேர்தலுக்கு பிறகும், மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வரலாமா அல்லது 'ஆன்லைன்'வழியில் தான் படிக்க வேண்டுமா என, பள்ளிக் கல்வித் துறை இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.

எனவே, பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் பள்ளிகள் செயல்படுமா அல்லது விடுமுறையா என்பதை அறிவிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறைக்கு, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.