பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாராகி உள்ளதால், அதை சரிபார்த்துக்கொள்ள, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.


பிளஸ் 2 மாணவர்களுக்கு மே, 3 முதல் பொது தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு மாணவர்களின் பெயர் விபரங்கள், பள்ளிகள் வழியே பதிவு செய்யப்பட்டு, தேர்வு துறைக்கு அனுப்பப்பட்டன. அந்த பட்டியல் பரிசீலிக்கப்பட்டு, தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல், மாநில அளவில் தயார் செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து, அரசு தேர்வு இயக்குனர் உஷாராணி, பள்ளிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:மே மாதம் நடக்க உள்ள பிளஸ் 2 பொது தேர்வுக்கு, பதிவு செய்துள்ள பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், வரும், 22ம் தேதி முதல், ஏப்.,1 வரை, 'ஆன்லைனில்' பதிவிறக்கம் செய்யலாம். அரசு தேர்வு துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்கள் பயனாளர் அடையாள குறியீட்டை பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்து, பெயர்களை சரிபார்த்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.