கோவை:மாநிலம் முழுக்க, 22 டி.இ.ஓ., பணியிடங்கள் காலியாக இருப்பதால், கல்விப்பணிகள் தேக்கமடைவதாக, புகார் எழுந்துள்ளது.


பள்ளிகளின் எண்ணிக்கை அடிப்படையில், 124 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இங்கு, மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) நியமித்து, எல்லைக்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகளையும் ஆய்வு செய்தல், உரிமம் புதுபித்தல், நலத்திட்டங்களை பள்ளிகளுக்கு கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டன.


இப்பணிகள் மேற்கொள்ள, தமிழகம் முழுக்க, 22 டி.இ.ஓ., பணியிடங்கள் காலியாக உள்ளன. தலைமையாசிரியர்களை பொறுப்பு அதிகாரியாக நியமித்துள்ளதால், அலுவலக பணி நடப்பதில் சிக்கல் நீடிப்பதாக, புகார் எழுந்துள்ளது. விரைவில், காலியிடங்களை, நிரப்ப வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.


தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் பீட்டர்ராஜா கூறுகையில்,''மாநிலம் முழுக்க, வரும் மே மாதத்தில், சிலர் பணிஓய்வு பெற உள்ளதால், காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதில், போட்டித்தேர்வு வாயிலாக நிரப்ப வேண்டிய இடங்களில் தகுதி பெறுவோர், ஆறு மாதம் பயிற்சி பெற வேண்டியது அவசியம். அதுவரை, பதவி உயர்வு வழங்காமல் இழுத்தடித்தால், கல்விப்பணி தேக்கமடையும். தேர்தல் அறிவிப்புக்கு முன், சீனியாரிட்டி பட்டியலில் இருப்போருக்கு, பணி ஒதுக்க வேண்டும்,'' என்றார்.