பெங்களூரு : "கொரோனா தடுப்பூசி போடும் திட்டம், வெற்றிகரமாக நடக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், கொரோனா விதிமுறைகளை, கட்டாயமாக பின்பற்ற வேண்டும். அலட்சியம் காண்பிக்கக்கூடாது," என, சுகாதாரம், மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சுதாகர் எச்சரித்தார்.


பெங்களூரின், மனிப்பால் மருத்துவமனையில், ஒரே நாள், 4,200 ஊழியர்களுக்கு, தடுப்பூசி போடும் பணிகள், இரண்டு கட்டங்களில் நடக்கிறது. இதை அமைச்சர் சுதாகர், நேற்று பார்வையிட்டார். பின் அவர் கூறியதாவது:கொரோனா தடுப்பூசி போடும் திட்டம், துவங்கிய பின், இதுவரை, 62 சதவீதம் பேர் தடுப்பூசி பெற்றுக்கொண்டனர். யாருக்கும் எந்த பின் விளைவுகளும், ஏற்படவில்லை. மணிப்பால் மருத்துவமனை நிறுவனர்களில் ஒருவரான சுதர்ஷன் பல்லாளும் கூட, தடுப்பூசி போட்டுக்கொண்டார்.


அவருக்கும் பின் விளைவு ஏற்படவில்லை.கொரோனா தடுப்பூசி பெற்று, 28 நாட்களுக்கு பின், 2வது டோஸ் பெற வேண்டியிருக்கும். அதுவரை முக கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது போன்ற, கொரோனா விதிமுறைகளை, பின்பற்றுவது கட்டாயம். அலட்சியம் செய்தால், பின் விளைவு ஏற்படும் வாய்ப்புள்ளது. தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்டோம். நமக்கு ஓன்றும் ஆகாது என்ற மனப்போக்கு கூடாது.தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், மதுபானம் அருந்தக்கூடாது. ஏனென்றால், இது மருந்தின் சக்தியை குறைக்கும்.


இதைப்பற்றி அறிக்கை பெற்று, ஆய்வு செய்யப்படுகிறது.தற்போது தடுப்பூசி பெற்றவர்களுக்கு, 28 நாட்களுக்கு பின், 2வது டோஸ் போடப்படும். இதற்காக பதிவு செய்து கொண்டவர்கள், ஏதேனும் காரணங்களால், தடுப்பூசி பெற முடியாமல் போனால், அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வாய்ப்பளிக்கப்படும். இன்று முதல், அதிக எண்ணிக்கையில், தடுப்பூசி போடப்படும். மாநிலத்துக்கு, வருகை தந்துள்ள, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, மரியாதை நிமித்தமாக, சந்தித்து பேசினேன். அவரை வரவேற்போர் பட்டியலில், என் பெயர் இருந்தது. நேற்று (முன்தினம்), தடுப்பூசி போடும் பணி இருந்ததால், என்னால் அங்கு செல்ல முடியவில்லை.


எனவே இன்று அமித் ஷாவை சந்தித்தேன். மாநிலத்தில், கொரோனா தடுப்பூசி போடும் பணி, எப்படி நடக்கிறது என்பதை விவரித்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.


https://www.dinamalar.com/news_detail.asp?id=2691482