திருவள்ளூர்; பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளதையொட்டி, அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து, திருவள்ளூர் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், சதுரங்கப்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளி மற்றும் பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில், கலெக்டர் பா.பொன்னையா, நேரில் சென்று வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் கழிப்பறை ஆகியவற்றை பார்வையிட்டார்.


பின், கலெக்டர் பொன்னையா கூறியதாவது:மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு வகுப்புகள் நாளை (இன்று) திறக்கப்படுகிறது. இதனால், அனைத்து பள்ளிகளும், தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, திருவள்ளுர் மாவட்டத்தில், 113 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 149 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 360 மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள், 125 சி.பி.எஸ்.இ., 10 சி.பி.எஸ்.இ. சுய நிதி பள்ளிகள் என, மொத்தம், 757 பள்ளிகள் உள்ளன. இதில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில், மொத்தம், 1.13 லட்சம் மாணவர்கள்,பங்கேற்க உள்ளனர்.பள்ளிகளை சுற்றிலும், கிருமி நாசினிகள் தெளித்தும், சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, ஒரு மாணவருக்கு, மூன்று முக கவசங்கள் என, அனைத்து மாணவர்களுக்கும், முக கவசங்கள், கைகளில் தடவக்கூடிய கிருமி நாசினிகள் என, அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.ஒரு பள்ளியில், இரண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி வைக்கப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலை பரிசோதிக்க தனித் தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில், 102 அரசு பள்ளிகளும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., சுயநிதி என, 132 தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.இப்பள்ளிகளில், சுகாதார நடவடிக்கைகள், நான்கு நாட்களாகவே நடைபெற்று வந்த நிலையில், மின் கம்பிகள், கழிப்பறை உள்ளிட்டவை முறையாக இருக்கின்றனவா என, பள்ளி நிர்வாகங்கள் சரிசெய்துள்ளன.பத்தாம் வகுப்பை பொறுத்தவரையில், அரசு பள்ளிகளில், 8,010, உதவி பெறும் பள்ளிகளில், 1,995, மெட்ரிக் பள்ளிகளில், 5,143, சுயநிதி உள்ளிட்ட பள்ளிகளில், 2,764 பேர் என, 17 ஆயிரத்து, 912 மாணவ - மாணவியர், இன்று பள்ளிக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேபோல், பிளஸ் 2 வகுப்பில், அரசு பள்ளிகளில், 6,806, உதவி பெறும் பள்ளிகளில், 1,434, மெட்ரிக் பள்ளிகளில், 4,632, சுயநிதி உள்ளிட்ட பள்ளிகளில், 1,995 பேர் என, 14 ஆயிரத்து, 867 மாணவர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.