கடுமையான விமரிசனங்கள் எழுந்ததாலும் லட்சக்கணக்கான பயனாளர்கள் டெலிகிராம், சிக்னல் என இதர செயலிகளுக்கு மாறுவதாலும், தனது புதிய விதிமுறைகளை அமல்படுத்தும் அவகாசத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது வாட்ஸ்ஆப்.

பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் ஆப் செயலி, பயனாளர்களின் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தால் மட்டுமே செயலியை தொடர முடியும் என்றும், அனுமதிக்காவிட்டால் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் வாட்ஸ்ஆப் செயலி இயங்காது என்றும் அறிவித்திருந்தது.

ஆனால், இதற்கு கடும் விமரிசனங்கள் எழுந்ததாலும், பயனாளர்கள் பகிரும் தகவல்கள் வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தப்படும் என்பதாலும், லட்சக்கணக்கானோர் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளத் தொடங்கினர்.

இந்த நிலையில், பயனாளர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் மற்றும் இதர விஷயங்களை வாட்ஸ்ஆப் பயன்படுத்தாது என்றும், வணிக ரீதியிலான உரையாடல்கள் மட்டுமே, தங்களது பயனாளர்களின் சேவையை விரிவுபடுத்தும் வகையில் பயன்படுத்திக் கொள்வதாகவும் வாட்ஸ்ஆப் விளக்கம் அளித்துள்ளது.

வாட்ஸ்ஆப்-பின் புதிய விதிமுறைகள் தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பல தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது என்று வாட்ஸ்ஆப் கூறியுள்ளது.

இந்த நிலையில், இந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தை வாட்ஸ்ஆப் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. அதன்படி மே 15-ஆம் தேதி வரை புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வராது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.