சென்னை : 'பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை, கொரோனா அறிகுறி உள்ளதா என, பரிசோதனை செய்ய வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார துணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கிருமி நாசினிஅனைத்து பள்ளிகளுக்கும், கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும். அனைத்து வகுப்பறைகளிலும், கிருமி நாசினி இருக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை, அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, கொரோனா அறிகுறி உள்ளதா என, சோதனை செய்ய வேண்டும்.


குறிப்பாக, இணை நோய்கள் உள்ள குழந்தைகளை, கண்டிப்பாக சோதனை செய்ய வேண்டும். அனைத்து வட்டங்களிலும், அவசர தேவை என்றால், உடனடியாக பணியாற்றும் வகையில், நடமாடும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்த குழுவின் தகவல், அனைத்து பள்ளிகளுக்கும் அளிக்க வேண்டும். அவசர காலத்தை எதிர் கொள்ளும் வகையில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.


நடவடிக்கை : கொரோனா அறிகுறிகள் கண்டறியப்படும் மாணவர்களுக்கு, உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஜிங்க், விட்டமின் மாத்திரைகளை, அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.பள்ளிகளை சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் கை கழுவ போதிய வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.