இட ஒதுக்கீட்டு முறையை சிதைக்க முயன்ற உயர்கல்வி செயலர் அபூர்வாவை உடனே மாற்ற வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:திருச்சி பாரதிதாசன் பல்கலையில், 28 துறைகளில் காலியாக உள்ள, 54 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை, 2019ல், ஜூலை, 8ல் வெளியிடப்பட்டது.தமிழக அரசு பல்கலையை பொறுத்தவரை, பல்கலைகளில், ஒவ்வொரு துறையும் ஓர் அலகாக கருதப்பட்டு, அதற்குள், 69 சதவீதம் இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட வேண்டும் என்பது, தமிழக அரசின் நிலைப்பாடு.


மத்திய பல்கலைகளை பொறுத்தவரை, ஒட்டுமொத்த பல்கலையையும், ஓர் அலகாகக் கருதி, இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பாரதிதாசன் பல்கலை, மாநில பல்கலை என்பதால், மாநில அரசின் கொள்கை தான் செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசை பின்பற்றி, ஒட்டுமொத்த பல்கலையையும், ஒரே அலகாகக் கருதி, பேராசிரியர்களை நியமிக்க, 2020மே, 28ல் அபூர்வா உத்தரவிட்டார்.


இதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் பாலமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:பாரதிதாசன் பல்கலை, மத்தியப் பல்கலை அல்ல; மத்திய அரசிடமிருந்து நிதியுதவி பெறவில்லை. மாநில பல்கலை என்பதால், ஒவ்வொரு துறையையும் ஓர் அலகாக கருதி, பணி நியமனங்கள் செய்யப்பட வேண்டும்.எனினும், அதை பின்பற்ற விரும்பாத உயர்கல்வித்துறை செயலர், தொழில் முறை அணுகுமுறையை கடைப்பிடிக்காமல், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளார். 


அனைத்திந்திய பணிகளுக்கான நடத்தை விதிகளை அவர் கடைப்பிடிக்கவில்லை. எனவே, அவர் உயர்கல்வித்துறை செயலராக தொடர தகுதியானவர் தானா என்பதை, உரிய அதிகாரம் கொண்ட அதிகாரி, தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அபூர்வா புகுத்த முயன்ற இடஒதுக்கீட்டு முறையை, நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. 


இட ஒதுக்கீட்டை சீர்குலைக்கும் இந்த சதிக்கு எதிராக, தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பா.ம.க., நீதிமன்ற நடவடிக்கையை வரவேற்கிறது.எனவே, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளவாறு, சமூக நீதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அபூர்வாவை, உயர்கல்வித்துறை செயலர் பதவியிலிருந்து, அரசு நீக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.