கோவிஷீல்டு 360° பார்வை : இந்தியத் தடுப்பூசியின் நோய்த் தடுக்கும் திறன் & பாதுகாப்பு அம்சங்கள்!
- Dr.A.B.ஃபரூக் அப்துல்லா,
_பொது நல மருத்துவர், சிவகங்கை _
வருகிற ஜனவரி 16-ஆம் தேதி முதல் நாட்டில் உள்ள கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான முன்களப்பணியாளர்களுக்கு "கோவிஷீல்டு" எனும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் அந்த தடுப்பூசி குறித்த விளக்கங்கள் இதோ உங்களுக்காக -
💉தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் யாது ?
மனிதர்களிடம் உருவ ஒற்றுமை மற்றும் மரபணு ஒற்றுமை கொண்ட சிம்பன்சி இனத்தில் சளி இருமல் உருவாக்கும் அடினோ வைரஸை வாகனமாக பயன்படுத்தி
அந்த வைரஸில் இருந்து அதன் மூலமரபணுக் கூறுகளை நீக்கி விட்டு அதில் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதங்களை உருவாக்கும் மூலமரபணுக்கூறு கொண்டு நிரப்பி மரபணு மாற்றம் செய்யப்பட்ட சிம்பன்சி அடினோ வைரஸும் கொரோனா வைரஸும் இணைந்த கூட்டுக்கலவையே இந்த வேக்சின்.
மனிதர்களிடத்தே நோய் உருவாக்க இயலாத அடினோ வைரஸ் தான் இங்கு "வெக்ட்டார்" (VECTOR) என்று அழைக்கப்படுகின்றது.
சிட்டி ரோபோவுக்குள் ரெட் சிப் பொருத்தியதும் அது 2.0 வாக மாறும் இல்லையா
அதே போன்று சிம்பன்சியின் அடினோ வைரஸுக்குள் புதிய கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதங்களை உருவாக்கும் மரபணு சொருகப்படுகின்றது
💉இந்த தடுப்பூசி எப்படி செயல்பட்டு நோய் எதிர்ப்பு திறனை உருவாக்குகிறது?
தசை வழியாக ( கை தோள் பட்டைப் பகுதியில்) ஊசி மூலம் செலுத்தப்படும் இந்த தடுப்பூசிக்குள் இருக்கும்
சிம்பன்சி அடினோ வைரஸ்
நமது உடலுக்குள் செலுத்தப்படுகின்றது.
உள்செலுத்தப்பட்ட அடினோ வைரஸுக்கு பல்கிப்பெருகும் தன்மை கிடையாது (NON REPLICATING TYPE)
நமது உடலானது இந்த வைரஸ்களை கிரிகிக்கின்றன.
ஒரு வேக்சின் டோஸில் ( அரை மில்லி லிட்டர்) சுமார் ஐம்பது பில்லியன் வைரஸ்கள் செலுத்தப்படும்.( 5க்கு அருகில் பத்து பூஜ்யம் போட்டுக்கொள்ளுங்கள்)
அந்த மரபணுக்களின் விளைவால்
கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதங்கள் உருவாக்கம் பெறுகின்றன.
நமது நோய் எதிர்ப்பு மண்டலம் அந்த ஸ்பைக் புரதங்களுக்கு எதிராக ஆண்ட்டிபாடிகள் எனும் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன
இவ்வாறு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது.
💉 எந்த வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்ந தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்?
18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் மட்டுமே ஆராய்ச்சிகள் செய்யப்பட்டிருப்பதால்
18 வயது பூர்த்தியானவர்கள் மட்டுமே இந்த தடுப்பூசிக்கு தகுதியுடையோராகிறார்கள்.
💉 முதியோர்களுக்கு இந்த தடுப்பூசி எத்தகைய நோய் எதிர்ப்பு சக்தியை தரும்?
❓65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இந்த தடுப்பூசி எத்தகைய எதிர்ப்பு சக்தியை தரும் என்பதற்கு தற்போதைக்கு ஆய்வு முடிவுகள் மூலம் நிரூபணமான சான்றுகள் இல்லை.
💉 யாரெல்லாம் இந்த தடுப்பூசியில் இருந்து விலக்கப்பட்டவர்கள்?
இந்த தடுப்பூசி உருவாக்கப் பயன்பட்டிருக்கும் பொருளில் ஏதோ ஒன்றிற்கு ஒவ்வாமை இருப்பின் அவர்கள் கட்டாயம் இந்த ஊசி போட்டுக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
தடுப்பூசி உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் :
1. L- ஹிஸ்டிடின்
2. L- ஹிஸ்டிடின் ஹைட்ரோ குளோரைடு மோனோ ஹைட்ரேட்
3. மெக்னீசியம் குளோரைடு ஹெக்சாஹைட்ரேட்
4. பாலிசார்பேட் 80
5. எத்தனால்
6. சுக்ரோஸ்
7. சோடியம் குளோரைடு
8. டைசோடியம் எடிட்டேட் டைஹைட்ரேட் (EDTA)
9. தண்ணீர்
💉இதற்குமுன் ஏதாவதொரு உணவுப்பொருளுக்கு மருந்துக்கு அல்லது தடுப்பூசிக்கு உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால் அதை மருத்துவரிடம் குறிப்பிட வேண்டியது தங்களின் கடமை 💉
⛔தடுப்பூசி போடும் சமயத்தில் கடுமையான காய்ச்சல் இருந்தால் கட்டாயம் தடுப்பூசி போடக்கூடாது.
சாதாரண காய்ச்சல்/சளி இருந்தால் பிரச்சினையில்லை.
❓ இந்த தடுப்பூசி எதிர்ப்பு சக்தி குன்றியோர் மற்றும் எதிர்ப்பு சக்தியை குன்றச்செய்யும் மருத்துகள் உண்போருக்கு எத்தகைய அளவு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்பது குறித்து போதுமான தகவல்கள் இல்லை.
⛔ தங்களுக்கு தட்டணுக்கள் குறைபாடு நோய் இருப்பின் அல்லது ரத்த உறைதல் குறைபாட்டு நோய் இருப்பின் கண்டிப்பாக மருத்துவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
காரணம் - ஊசி போட்ட இடத்தில் ரத்தம் உறையாத தன்மை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
⛔ கர்ப்பிணிகளிடத்திலும் தாய்ப்பால் தரும் பெண்களிடத்திலும் இந்த தடுப்பூசி எத்தகைய நிலையில் வேலை செய்யும் என்பது குறித்த போதுமான தகவல்கள் இல்லை. எனவே தங்களது மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசித்து இந்த தடுப்பூசி பெறுவது குறித்து முடிவு செய்யுங்கள்.
❌பக்க விளைவுகள் ❌
இந்த தடுப்பூசி ஆய்வில் இருக்கும் போது பங்கேற்பாளர்களுக்கு ஏற்பட்ட பக்க விளைவுகள் இதோ
எதிர்பார்க்கப்படும் பக்க விளைவுகள் ( Expected Adverse Events)
ஊசி பெறுபவர்களில் பத்தில் ஒருவருக்கு மேல் இந்த பக்கவிளைவுகள் ஏற்படலாம்
Very common side effects
1.தலைவலி
2. உடல் வலி / தசை வலி
3. குமட்டல்
4. ஊசி போட்ட இடத்தில் வலி,சூடாக இருத்தல்,சிவந்து காணப்படுதல், அரிப்பு ஏற்படுதல், வீக்கம் ஏற்படுதல், சிராய்ப்பு போலக்காயம் ஏற்படுதல்
5. உடல் சோர்வு
6. காய்ச்சல்
7. குளிர் நடுக்கம்
மேற்சொன்னவைக்குத் தேவைப்பட்டால் பாராசிட்டமால் மாத்திரை எடுத்து ஒருநாள் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும்.
ஊசி பெறுபவர்களில் 100-ல் ஒருவருக்கு என்ற அளவில் எதிர்பார்க்கப்படும் பக்க விளைவுகள் :
Common adverse effects
1. ஊசி போட்ட இடத்தில் தடிப்பு
2. ப்ளூ போன்ற காய்ச்சல்
3. வாந்தி
ஊசி பெறுபவர்களில் 1000-ல் ஒருவருக்கு என்று எதிர்பார்க்கப்படும் அரிதான பக்க விளைவுகள் :
( uncommon side effects)
1. கழலைகள் வீக்கம்
2. பசிஉணர்வு மட்டுப்படுதல்
3. தலைசுற்றல்
4. வயிற்று வலி
5. அதிகமான தாகம்
6. அரிப்பு
7. உடல் முழுவதும் படை
மேற்சொன்ன பக்கவிளைவுகளுக்கு மருத்துவரை சந்தித்தால் மாத்திரைகள் மூலம் சிகிச்சை செய்து சரி செய்ய இயலும்.
இவையன்றி ஆய்வுகளில் காணப்படாத பக்கவிளைவுகளும் தோன்றும் வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு தோன்றினால் மருந்து கம்பெனிக்கும் இந்திய அரசுக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
இவையன்றி மிக மிக அரிதாக
நரம்பு மண்டலத்தை தாக்கும் நோய் ஆய்வில் இருந்த ஒரு சிலருக்கு ஏற்பட்டது. ஆனால் பலதரப்பட்ட ஆய்வுகளுக்குப் பின் அத்தகைய நிகழ்வுகளுக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.
💉இந்த தடுப்பூசியின் கொரோனா நோய் தடுப்பு திறன் எப்படி இருக்கும்?
70.4 சதவிகித நோய் தடுப்பு திறனை இந்த தடுப்பூசி தனது ஆய்வுகளில் நிரூபித்தது.
இந்தியாவில் இந்த தடுப்பூசி கொண்டு செய்யப்பட்ட ஆய்வில் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் போட்டுக்கொண்டவர்களுள் சிறப்பான அளவில் கோவிட்டுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டியுள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்ட்டிபாடிகள் மற்றும் எதிர்ப்பு சக்தி மண்டலத்தின் நினைவுப்பகுதி செல்களான டி செல் எதிர்ப்பு சக்தியையும் நன்றாக தூண்டுவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுள் யாருக்கும் தீவிர கோவிட் நோய் ஏற்படவில்லை. கோவிட் நோயால் மரணமும் ஏற்படவில்லை.
💉 இந்த தடுப்பூசியை எப்படி பாதுகாத்து வைப்பது?
நமது குளிர்சாதப்பெட்டிகளில்
+2 முதல் +8 டிகிரி குளிரில் பாதுகாக்க முடியும்
எனினும் வெளியே எடுத்து விட்டால்
+2 முதல் +25 டிகிரிக்குள் ஆறு மணிநேரம் தனது குணம் குன்றாமல் இருக்கும்.
மேற்சொன்ன அனைத்து விசயங்களையும் சீர்தூக்கிப்பார்த்து தனக்கு கொரோனா தடுப்பூசி வேண்டும் என்று கூறுபவர்களுக்கு மட்டுமே இந்த தடுப்பூசி வழங்கப்படும்.
யார் மீதும் வற்புறுத்தி இந்த தடுப்பூசி போடப்படாது.
தடுப்பூசிக்கு ஒரு வருடமாக காத்திருந்தோம்
தற்போது நாம் தேடிக்கொண்டிருந்த தடுப்பூசி நமக்கு அருகில் வர இருக்கிறது.
0 Comments
Post a Comment