சென்னை : வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்து, மாவட்ட கலெக்டர்களுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில், நவம்பர், 16 முதல், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது. 21, 22ம் தேதிகளில், வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. இதில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர், பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.இம்மாதம், 15 வரை, திருத்தப் பணி நடக்க உள்ளது. வரும், 12, 13ம் தேதிகளிலும், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், நேற்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, ஆலோசனை நடத்தினார்.

பல தொகுதிகளில், புதிதாக பெயர் சேர்க்க, அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றை பரிசீலனை செய்து, தவறு இல்லாமல், வாக்காளர் பட்டியல் தயாரிப்பது குறித்து, தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனைகள் வழங்கினார்.