சென்னை :தமிழகத்தில், பல மாவட்டங்களில், மீண்டும் கன மழை பெய்யும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. இரு வாரமாக குறைந்திருந்த, வடகிழக்கு பருவ மழை, இன்று முதல் வலுப்பெற உள்ளதால், பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி, அரசு அறிவுறுத்தி உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வடகிழக்கு பருவ மழை, நவம்பரில் துவங்கி பலமாக கொட்டித் தீர்த்தது. அத்துடன், வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களை, 'நிவர்' மற்றும் 'புரெவி' என, இரண்டு புயல்கள் தாக்கின. இதனால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பலத்த சேதம்ஏற்பட்டது. அதற்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடப்பதற்கு ஏதுவாக, இரண்டு வாரங்களாக, மழையின் தீவிரம் குறைந்திருந்தது.


ஒரே நாளில் 17 செ.மீ.,


இந்நிலையில், தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி, வளிமண்டல சுழற்சி நிலவுவதால், பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. 15ம் தேதி முதல், டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம், கடலுார், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில், கன மழை கொட்டியது. விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டியில், 17 செ.மீ., மழை பெய்து உள்ளது. இந்த திடீர் மழையால், விழுப்புரம் மாவட்டத்தின் பல கிராமங்களில், வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில், ஏரி, குளங்களின் கரைகள் உடைந்து, ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.


வளி மண்டல சுழற்சி


நேற்று காலை நிலவரப்படி, திருக்கோவிலுார், 16; புதுச்சேரி, 15; மயிலம், 13; உளுந்துார்பேட்டை, 12; கடலுார், கள்ளக்குறிச்சி, 10 செ.மீ., மழை பெய்துள்ளது. விழுப்புரம், சங்கராபுரம், சேத்தியாத்தோப்பு, 8; வேப்பூர், திண்டிவனம், புவனகிரி, வானுார், 7; காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, பெரம்பலுார், லெப்பைக்குடிக்காடு, பரங்கிப்பேட்டை, 6 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின், தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் நிலவும், வளி மண்டல சுழற்சியால், பல மாவட்டங்களில், கனமழை பெய்து வருகிறது. இன்று, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலுார், விழுப்புரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில், கன முதல் மிக கன மழை பெய்யும். வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் தமிழக தென் மாவட்டங்களில், பல இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும்.

சில இடங்களில், லேசான மழை பெய்யும். வடகிழக்கு பருவமழை, இந்த மாத இறுதி வரை பெய்யும். பருவக்காற்று குறைவதுடன், அதன் ஈரப்பதமும் குறைந்தால் தான், மழைப் பொழிவு குறையத் துவங்கும். தற்போதைய சூழ்நிலையில், மழை தொடர்வதற்கே வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு, பாலச்சந்திரன் கூறினார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, அனைத்து மாவட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகளும், தங்கள் பகுதிகளில் உள்ள, குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், 24 மணி நேரமும் நீர்வரத்தை கண்காணிக்குமாறும், அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத அளவுக்கு, பொது மக்கள் உஷாராக இருக்குமாறும், அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.


7 சதவீதம் அதிகம்

வடகிழக்கு பருவமழை காலத்தில், அக்., 1 முதல் தற்போது வரை, சென்னையில் சராசரியாக, 73 செ.மீ., மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், இயல்பை விட, 41 சதவீதம் அதிகமாக, சென்னையில், 103 செ.மீ., மழை பெய்துள்ளது. அதேபோல, மாநிலம் முழுதும், இந்த காலகட்டத்தில், 42 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், ஏழு சதவீதம் அதிகமாக, 45 செ.மீ., பெய்துள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.