புதுடில்லி: 'பைசர்' நிறுவனத்தைத் தொடர்ந்து, கொரோனா வைரசுக்கு எதிரான தங்களது தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கோரி, 'சீரம்' நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.


கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிக்க பல முயற்சிகள் நடந்து வருகின்றன. இவற்றில் பல மருந்துகள், மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன. அனைத்து பரிசோதனைகளும் முடிந்து, பயன்படுத்த உகந்தது என்று சான்றளிக்கப்பட்ட பின்பே, தடுப்பூசிகளை பயன்படுத்த முடியும்.


தற்போது வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால், அனைத்து பரிசோதனைகளும் முடியும் வரை காத்திராமல், அவசரநிலையை உணர்ந்து, முன்னதாகவே பயன்படுத்த, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பித்து வருகின்றன. அதன்படி, பைசர் நிறுவனத்தின் மருந்தை பயன்படுத்த, பிரிட்டன், பஹ்ரைன் நாடுகள் அனுமதி அளித்துள்ளன.


தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கோரி, டி.ஜி.சி.ஏ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையத்திடம், பைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் இணைந்து, 'கோவாக்சின்' என்ற தடுப்பூசி மருந்தை உருவாக்கி உள்ளன.


இந்த தடுப்பூசி மருந்தை இந்தியாவில் உற்பத்தி செய்யும் மற்றும் பரிசோதனை செய்யும் ஒப்பந்தம், மஹாராஷ்டிர மாநிலம், புனேயை தலைமையிடமாக வைத்து செயல்படும், சீரம் மையம் பெற்றுள்ளது.தங்கள் தடுப்பூசியை முன்னதாகவே பயன்படுத்த அனுமதி கோரி, அந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஆதர் பூனேவாலா, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் உறுதி செய்துள்ளார்.