சென்னை:கொரோனா தொற்று பரவலால், பல மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லுாரிகள், பல்கலைகள் அனைத்தும், இன்று முதல் திறக்கப்பட்டு, இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மருத்துவம், மருத்துவம் சார்ந்த கல்லுாரிகளில் மட்டும், இளநிலை, முதுநிலை என, அனைத்து வகுப்புகளும் இன்று துவங்கப்படுகின்றன.

கொரோனா தொற்றுநோய் பரவலால், மார்ச்சில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. இதையடுத்து, புதிய கல்வி ஆண்டு துவங்கிய பிறகும், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால், கல்லுாரிகள், பல்கலைகளை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.

இதன்படி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், முதுநிலை படிப்பில், இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, டிச., 2 முதல் நேரடி வகுப்புகள் துவங்கின. இதையடுத்து, அனைத்து வகை கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, இன்று முதல் நேரடி வகுப்புகள் துவங்க உள்ளன.

எந்தெந்த கல்லுாரிகள்?

கலை, அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், வேளாண்மை, மீன் வளம், கால்நடை மருத்துவ அறிவியல் கல்லுாரிகளில், இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கப்படுகின்றன. ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இவை தவிர, மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லுாரிகளில், இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள், இன்று முதல் துவங்கப்படுகின்றன. மருத்துவத்தில் மட்டும், அனைத்து வகுப்பு மாணவர்களும், இன்று முதல் கல்லுாரிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப் பட்டுஉள்ளது. நடப்பு கல்வியாண்டில் புதிதாக சேரும் மருத்துவ மாணவர்களுக்கு மட்டும், பிப்., 1 முதல் வகுப்புகள் துவங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான விடுதி களையும், இன்று முதல் திறக்கலாம் என, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு பின், கல்லுாரி, பல்கலைகள் திறக்கப்படுவதால், மாணவர்கள் குஷியடைந்துள்ளனர்.


வழிமுறைகள் என்ன?

அனைத்து வகை கல்லுாரிகளும் திறக்கப்படும் நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள், கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான பாதுகாப்பு வழிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

வழிமுறைகள் என்ன?

* வகுப்புகளில் நெருக்கமாக மாணவர்கள் அமரவோ, நிற்கவோ கூடாது. சமூக இடைவெளிக்கு வாய்ப்பில்லாத நிலையில், பாட திட்டம் சாராத இணை கல்வி நடவடிக்கைகளுக்கு அனுமதிக்க வேண்டாம்

* வெளியாட்கள், செயல்முறை வகுப்பு எடுக்கவும், வேறு பணிகளுக்கு வருவதையும் அனுமதிக்க வேண்டாம்

* மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சானிடைசர் மற்றும் சோப்பால், கைகளை சுத்தம் செய்ய, ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்

* கல்லுாரிக்கு வர இயலாத மாணவர்களுக்கு, ஆன்லைனில் பாடம் நடத்த வேண்டும். வெளிநாட்டு மாணவர்களுக்கும், ஆன்லைனில் பாடம் நடத்த வேண்டும்சுழற்சி வகுப்புகள்

* இட பற்றாக்குறை இருந்தால், 50 சதவீத மாணவர்களை வைத்து, சுழற்சி முறையில் பாடம் நடத்தலாம். வாரம் ஆறு நாட்களும் கல்லுாரிகள், பல்கலைகள் இயங்க வேண்டும்

* பேராசிரியர்கள், பணியாளர்களும், கொரோனா தடுப்பு முறைகளில் அக்கறை காட்ட வேண்டும்

* விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள், உணவை பார்சலாக பெற்று செல்ல அனுமதிக்க வேண்டும். உணவறையில் கூட்டம் கூடக் கூடாது. உணவு வழங்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்

* நுழைவு வாயிலில், மாணவர்களின் உடல் வெப்பநிலை சோதித்த பின் அனுமதிக்க வேண்டும். கொரோனா பாதித்து, சிகிச்சை பெற்று வரும் மாணவர்களிடம், பாரபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது

* தொற்று அறிகுறி உள்ளவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு, பல்வேறு வழிகாட்டு முறைகள் கூறப்பட்டுள்ளன.