சென்னை,: ''மழை காலங்களில், இரண்டு நாள் தொடர் சளி, இருமல் போன்றவை இருந்தால், அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம்,'' என, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறினார்.

தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதற்கிடையே, மழைக்கால நோய்களுக்கும் மற்றும் கொரோனா தொற்றுக்கும், ஒரே மாதிரியான உடல் உபாதைகளும், அறிகுறிகளுமே ஏற்படுகின்றன. அதனால், அனைவருக்கும், கொரோனா பரிசோதனை அவசியமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:மழைக் காலம் என்பதால், சளி, இருமல், காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. அவ்வாறு உடல் உபாதைகள் ஏற்படுவோர், உடனடியாக டாக்டரை அணுகி, சிகிச்சை பெற வேண்டும். கொரோனா பரிசோதனை தேவை என்றால், சிகிச்சை அளிக்கும் டாக்டர்களே, அதற்கு பரிந்துரை செய்வார். சளி, இருமல், காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை பெற்று, இரண்டு நாட்களுக்கு மேலும் குணமாகாமல், அது தொடர்ந்தால், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.