சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (டிச.,2) காலை புரெவி புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே 900 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை காலை (புரெவி) புயலாக வலுப்பெற்று, இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடக்கும். டிச.,3ம் தேதி காலை தென்தமிழக கடல் பகுதியை நெருங்கும். இன்று (டிச.,1) தஞ்சாவூர், திருவாரூர், நாகைப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.


நாளை தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழைக்கும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகைப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. டிச.,3ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.