சென்னை:தமிழகத்தில் செயல்படும், 2,900 நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார உத்தரவுகள் வழங்கும் பணி துவங்கியுள்ளது.


வேலுார் மண்டலத்தில், 460 பள்ளிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவுகளை வழங்கினார். தமிழகத்தில், 37 மாவட்டங்களில், 5,946 சுயநிதி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படுகின்றன. இவற்றில், எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.


இந்த பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, பள்ளி கல்வி துறையால், தொடர் அங்கீகார ஆணை வழங்கப்படுகிறது.இந்த முறை, 37 மாவட்டங்களும், ஒன்பது மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அவற்றில் செயல்படும், 2,900 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகார ஆணை வழங்கப்பட உள்ளது.முதற்கட்டமாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 120 பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கப்பட்டது.


வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த, 460 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கப்பட்டது. இதற்கான ஆணையை, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி நிர்வாகிகளிடம் நேரடியாக வழங்கினார்.


வேலுார் மாவட்டத்தில், 150; ராணிப்பேட்டை, திருப்பத்துாரில், 90; திருவண்ணாமலையில், 140 என, மொத்தம், 460 பள்ளிகள் அங்கீகார உத்தரவை பெற்றுள்ளன. மீதமுள்ள பள்ளிகளுக்கும், விரைவில் உத்தரவுகள் வழங்கப்படும் என, தொடக்க கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதற்கான நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வீரமணி, நிலோபர் கபில், தொடக்க கல்வி இயக்குனர் பழனிச்சாமி, முதன்மை கல்வி அலுவலர்கள் மார்ஸ் மற்றும் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.