சென்னை : சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த தமிழக மாணவிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்து  திருவண்ணாமலையைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கர் சாதனை படைத்துள்ளார். இதற்காக இவருக்கு ஸ்வீடன் நாட்டின் சூழலியல் அறக்கட்டளை சாா்பில், இள வயது கண்டுபிடிப்பாளா்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  ஸ்வீடனின் துணைப் பிரதமா் இசபெல்லா இன்று கலந்து கொள்ளும் இணையவழி நிகழ்வில், விருது வழங்கப்படுகிறது. இந்த விருதில், பட்டயம், பதக்கம் குறிப்பாக ஸ்வீடன் நாட்டின் பண மதிப்பில் 100,000 (சுமாா் ரூ. 8 லட்சத்து 63 ஆயிரம்) வழங்கப்படுகிறது. இந்தப் பரிசுத் தொகையை தனது வருங்கால கண்டுபிடிப்புகளுக்குப் பயன்படுத்தவுள்ளதாக வினிஷா உமாசங்கா் தெரிவித்தாா்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'இளம்வயதிலேயே அறிவியல்மீது ஆர்வம்கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ள திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கர் தற்போது சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்து ஸ்வீடன் விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!,' எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இவா், தானாகவே இயங்கும் வகையில் அறிதிறன் மின்விசிறியைக் கண்டறிந்திருந்து விருது பெற்றுள்ளார்.கடந்த ஆண்டு டாக்டா் ஏபிஜே அப்துல் கலாம் இக்னைட் விருதும் சிறந்த பெண் கண்டுபிடிப்பாளா் பிரிவில், டாக்டா் பிரதீப் பி தேவனூா் கண்டுபிடிப்பாளா் விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்போது,18 வயதுக்குக் கீழ் உள்ள மாணவா்களின் பிரிவில் பிரதமரின் ராஷ்டிரீய பால் சக்தி புரஸ்காா் விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.