சென்னை: தீபாவளி விடுமுறை முடிந்து விட்டதால், பள்ளி மாணவர்களுக்கு, இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்குகின்றன.

கொரோனா பரவல் குறைந்து விட்ட நிலையில், நாடு முழுதும், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், இன்னும் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை.கல்லுாரிகளில், முதுநிலை இறுதியாண்டு படிக்கும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி மாணவர்களுக்கு மட்டும், வரும், 2ம் தேதி முதல் கல்லுாரிகளில், நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதால், தமிழகம் முழுதும், பள்ளி, கல்லுாரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கு, நான்கு நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டது.இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, தீபாவளி விடுமுறை முடிந்து, இன்று முதல் கல்வி, 'டிவி'யில் வீடியோ பாடங்கள் ஒளிபரப்பாக உள்ளன. தனியார் பள்ளிகள் சிலவற்றில் இன்றும், சிலவற்றில் நாளையும், ஆன்லைன் வகுப்புகள் துவங்க உள்ளன.விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்ற மாணவர்கள், அங்கிருந்தவாறே ஆன்லைனில் வகுப்புகளில் பங்கேற்கலாம் என்று, தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளன.