மதுரை:  அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கையில், உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஆனையூரைச் சேர்ந்த துர்காதேவி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சிவகாசி அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 முடித்தேன். தற்போது அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும்  மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

எனது குடும்பம் ஏழ்மையானது. அரசியலமைப்பு சட்டப்படி அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க வேண்டும். எனவே, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் உள்இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்யவும், இந்த அரசாணையை அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவியருக்கும் விரிவுபடுத்தவும் உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், மனு குறித்து தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர், மருத்துவ கல்வி இயக்குநர் ஆகியோர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.