சென்னை:தமிழக அரசு துறைகளில், பல்வேறு பிரிவு ஊழியர்களுக்கு, ஊதியத்தை மாற்றி அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, உதவி பொறியாளர்கள் உட்பட, சில பதவிகளில் உள்ளவர்களுக்கு, சம்பளம் குறைக்கப்படுகிறது.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த ஆண்டு, டில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில், ஊதிய குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டது. குழு உறுப்பினர்களாக, தற்போதைய வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப் பட்டனர்.

இக்குழு, ஊதிய கட்டமைப்பில் உள்ள குறைபாடு தொடர்பாக, தனி நபர்கள் மற்றும் பணியாளர் சங்கங்களிடம் மனுக்கள் பெற்றது. அந்த மனுக்களை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்தது. குழுத் தலைவர் முருகேசன், செப்டம்பர் மாதம், முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து அறிக்கை அளித்தார்.அறிக்கை அடிப்படையில், அரசு ஊழியர்கள் பலரின் சம்பளத்தை மாற்றி அமைக்க, தமிழக அரசு சார்பில், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர்கள், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர்கள் உட்பட பலருக்கு, அடிப்படை சம்பளத்தை குறைத்து நிர்ணயம் செய்ய, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொருவருக்கும், 4,500 - 5,000 ரூபாய் வரை, மாத சம்பளத்தில் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.அதேநேரம், கால்நடைத் துறை உட்பட, சில துறை ஊழியர்களுக்கு, கூடுதல் சம்பளம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும், தனித்தனியே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.