சென்னை:சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் ஓட்டுச்சாவடி பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் பட்டியலை சேகரிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன.வாக்காளர் கணக்கெடுப்பு, பிழைதிருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. வரைவு வாக்காளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டசபை தேர்தலில் ஓட்டுச்சாவடி பணிக்கு நியமிக்க தகுதியான ஊழியர்களின் விபரங்களை சேகரிக்க மாவட்ட கலெக்டர்கள் வழியே பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர், பதவி நிலை உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க துவங்கியுள்ளனர்.இன்னும் ஒரு வாரத்தில் உரிய விபரங்களை சமர்ப்பிக்க தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.