பள்ளிகள் திறப்பு தொடர்பாக வரும் நவ.9ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 7 மாதங்களாக மூடப்பட்டிருக்கும் பள்ளி, கல்லூரிகள் வரும் 16ம் தேதி திறக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், பருவ மழை, கொரோனா பாதிப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை தள்ளிப்போட வேண்டும் என எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. இதனால் பள்ளிகள் திறப்பை தள்ளிபோடுவதா? என்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று காலை, கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தொடர்பாக வரும் 9ம் தேதி கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அன்று காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்றும் 9,10,11,12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் அதில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், நேரில் பங்கேற்க இயலாதவர்கள் கடிதங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.