மதுரை: மருத்துவ படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீட்டின் இடம் ஒதுக்க கோரி மாணவியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மனு தாக்கல் செய்த மாணவியின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு மட்டும் மாணவி படித்ததாக மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தமிழக அரசு, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது. இதில், அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவா்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என, திருநெல்வேலியைச் சோ்ந்த மாணவி உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கில், கடந்த 3 ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் எத்தனை போ் மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ளனா் என்பது குறித்து மனுதாரரை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா். இந்நிலையில், விருதுநகா் மாவட்டம் சிவகாசி ஆணையூரைச் சோ்ந்த அரசு உதவிபெறும் பள்ளி பிளஸ் 2 மாணவி துா்காதேவி, உள்ஒதுக்கீடு தொடா்பாக மனு தாக்கல் செய்தாா். அதில், அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு உள்ஒதுக்கீட்டில் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

அரசியல் சட்டப்படி அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிப்பது மறுக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் உள்ஒதுக்கீட்டில் பங்குபெறும் வகையில் புதிய அரசாணை வெளியிடவும், பழைய அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா். இந்நிலையில் இந்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மேலும் அந்த மாணவி அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு மட்டும் மாணவி படித்ததாக மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.