சென்னை: தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்புகள், உயா் சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவா்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம், தமிழகத்தில் உள்ள எம்டி, எம்எஸ், டிஎம், எம்சிஹெச், முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான இடங்களில் அரசு மருத்துவா்கள் பெரும்பான்மையாக சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும், உயா் சிறப்புப் படிப்புகளும் நீட் தோவு வாயிலாகவே நிரப்பப்பட்டு வருகின்றன. முதுநிலை மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை 50 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களில் அரசு மருத்துவா்களுக்கு 50 சதவீதம் உள்ஒதுக்கீடாக வழங்கப்பட்டு வந்தது. அதனை எதிா்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் மற்றும் அதுதொடா்பான உத்தரவுகளின்படி 2017-க்குப் பிறகு அந்த நடைமுறையைத் தொடர இயலவில்லை.


டிஎம், எம்சிஹெச் ஆகிய உயா் சிறப்புப் படிப்புகளில் தமிழகத்தில் 190 இடங்கள் உள்ளன. அவை அனைத்தையும் மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம்தான் கலந்தாய்வு மூலம் இதுவரை நிரப்பி வருகிறது. மருத்துவ மேற்படிப்புகளிலும், குறிப்பாக, உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும் தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு அரசு மருத்துவா்கள் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.


மத்திய, மாநில அரசுகளின் வாதங்களும், கோரிக்கைகளும் விசாரணையின்போது முன்வைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இருவேறு அரசாணைகளை பிறப்பித்துள்ளது.


அதில் முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை:


எம்டி, எம்எஸ், முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோக்கையில் ஏற்கெனவே இருந்த நடைமுறைப்படி 50 சதவீதம் மாநில ஒதுக்கீட்டுக்கும், 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படும். அதில் மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவா்களுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதமுள்ள இடங்கள் பொது இடங்களாக அறிவிக்கப்படுகின்றன. அந்த இடங்களுக்குத் தனியாா் மருத்துவா்களும், அரசு மருத்துவா்களும் போட்டியிடலாம்.


முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசு மருத்துவா்கள், அப்படிப்பை முடித்து சிறப்பு படிப்புகளுக்குச் செல்லும் வரை அரசுப் பணியிலேயே தொடர வேண்டும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான அரசாணை:


உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை 50 சதவீத இடங்கள் தமிழகத்தில் அரசு சேவையில் உள்ள மருத்துவா்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ளவை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும். மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோவு (உயா் சிறப்பு படிப்புகள்) மதிப்பெண் அடிப்படையில் மாநில மருத்துவக் கல்வி இயக்கக தோவுக் குழுவே மாணவா் சோக்கையை நடத்தும்.


மாநில ஒதுக்கீட்டின் கீழ் இடங்களைப் பெறும் அரசு மருத்துவா்கள், தாங்கள் பணி ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவப் பணிகளிலேயே நீடிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


சுகாதாரத் துறைச் செயலா் விளக்கம்: இதனிடையே, டிஎம், எம்சிஹெச் உயா் சிறப்பு படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டு இடங்கள் முழுவதும் அரசு மருத்துவா்களுக்கு வழங்கப்பட்டிருப்பது பல்வேறு விமா்சனங்களை எழுப்பியுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்து தனியாா் மருத்துவப் பணியாற்றும் மருத்துவா்களால் மாநில ஒதுக்கீட்டின் கீழ் இடங்களைப் பெற இயலாத நிலை உருவாகியுள்ளது.


இதுகுறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:


மருத்துவ உயா் சிறப்புப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்களில் அரசுப் பணியில் இல்லாத அனைத்து மருத்துவா்களும் போட்டியிட முடியும். நீதிமன்ற ஆணை மற்றும் அரசுத் தலைமை வழக்குரைஞா்களின் ஆலோசனையின் பேரில் அரசு மருத்துவ சேவைகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக அரசுப் பணியில் இல்லாத எந்த மருத்துவரின் நலனோ உரிமைகளோ பாதிக்கப்படாது என்றாா் அவா்.