சென்னை: தமிழக கடற்பகுதியில்நிலவும், மேலடுக்கு சுழற்சியால், 13 மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின், தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:குமரி முதல் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்கள் வரை, வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், பரவலாக மழை பெய்யலாம்.

சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யலாம். உள் மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும். சென்னையில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யலாம்.நாளை பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழையும், கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். தென் மாவட்டங்களில், நாளை இடி, மின்னலுடன், சில இடங்களில் கன மழை பெய்யும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், கேளம்பாக்கம், 9; செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பல்கலை, 7; சேத்தியாத்தோப்பு, செங்கல்பட்டு, 5; நன்னிலம், மதுராந்தகம், 4; வந்தவாசி, சீர்காழி, ராமேஸ்வரம், நுங்கம்பாக்கம், செம்பரம்பாக்கத்தில், 3 செ.மீ., மழை பெய்துள்ளது.