சென்னை:இன்ஜினியரிங் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங் குறித்து, சரியான விளக்கங்கள் அளிக்காமல், உயர் கல்வித்துறை அலட்சியமாக உள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங், நேற்று முன்தினம் துவங்கியது. சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு, அதாவது, மாற்று திறனாளிகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.வரும், 8ம் தேதி, பொது பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் துவங்க உள்ளது.

இந்நிலையில், மாணவர்கள், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில், எந்த அடிப்படையில் இடங்களை தேர்வு செய்ய வேண்டும்; கல்லுாரிகள் மற்றும் பாடப் பிரிவுகளை தேர்வு செய்யும் முறை; உத்தேச ஒதுக்கீடு அளிக்கும் முறை.மேலும், கவுன்சிலிங்கில் பங்கேற்காமல் விட்டால், கட்டணம் கிடைக்குமா என்பது போன்ற விபரங்களை, உயர் கல்வித்துறை வெளியிடவில்லை.

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை இணையதளத்திலும் தெளிவான வழிகாட்டுதல் இல்லை. சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்கள், இன்று முதல் விருப்ப பதிவு செய்யும் நடைமுறை துவங்க உள்ளது. ஆனாலும், கவுன்சிலிங் தொடர்பாக, உயர் கல்வித்துறை அதிகாரிகள் சரியான விபரங்களை வெளியிடாததால், குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

வங்கி விடுமுறை நாளால் தவிப்பு

சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்கள், நேற்று முன்தினம் முதல், நேற்று மாலை வரை, கவுன்சிலிங் கட்டணம் செலுத்தலாம் என, திடீரென அறிவிக்கப்பட்டது. ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் வசதி இல்லாதவர்கள், வங்கிகளில், டி.டி., என்ற வரைவோலையாக எடுத்து, அதை சேவை மையங்களில் வழங்க வேண்டும். ஆனால், நேற்று வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், டி.டி., எடுக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டனர்.