சென்னை: கொரோனா  ஊரடங்கு காரணமாக புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அரசு பணிகளில் நியமிக்கப்படும் பணியாளர்கள் நியமனத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கால் மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது. குறிப்பாக,  வணிக வரித்துறை, பதிவுத்துறை, வருவாய், போக்குவரத்து, டாஸ்மாக் துறை மூலம் ஆண்டுக்கு சராசரியாக ₹1.50 லட்சம் கோடிக்கு வருவாய் கிடைக்கும்.   ஆனால், இந்த கொரோனா ஊரடங்கால் தமிழக அரசின் வருவாய் முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 6 மாதங்களில் வணிகவரி, பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் கிடைக்க வேண்டிய வருவாயில் 50 சதவீதத்துக்கு மேல் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், தமிழக அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது.

எனவே, இதனை சமாளிக்கும் பொருட்டு அரசு சார்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அரசின் செலவினங்களை கட்டுப்படுத்தும் வகையில் அரசு விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவு பரிசு வழங்குவதை தவிர்க்க அறிவுரை வழங்கப்பட்டன. அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர்வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், அனைத்து அரசு துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கு தடை விதித்து கடந்த செப்டம்பர் 21ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. அதே நேரத்தில், பணியாளர்கள் குழுவின் ஒப்புதலின் பேரில் கருணை அடிப்படையில் ெதாடக்க நிலை பணியிடங்களுக்கு நியமனம் செய்து கொள்ளலாம் என்றும், ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் படி அரசு பணியாளர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது.  

இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் மீண்டும் அரசு துறைகளில் புதிய பணியிடங்களை தோற்றுவிக்க தடையில்லை என்று தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் ஆரம்ப நிலை பணியாளர்களை தேர்ந்தெடுக்கலாம். கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு எந்தவித தடையும் இல்லை. அரசு துறைகளில் புதிய பணியாளர்களை நியமனம் செய்வதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

* கொரோனா ஊரடங்கால் தமிழக அரசின் வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
* புதிய பணியிடங்களை உருவாக்க கடந்த செப்டம்பர் 21ம் தேதி தடை விதிக்கப்பட்டது.
* தற்போது மீண்டும் அரசு துறைகளில் புதிய பணியிடங்களை தோற்றுவிக்க அனுமதி.
* மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் ஆரம்ப நிலை பணியாளர்களை தேர்ந்தெடுக்கலாம்.