மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசா ணையை தமிழக அரசு பிறப்பித்துள் ளது. இது தொடர்பான சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ள நிலையில், அவசரநிலை கருதி தமிழக அரசு தனக்கான நிர்வாக அதிகாரத் தின்கீழ் கொள்கை முடிவெடுத்து இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வால் தமி ழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று, மருத்துவப் படிப்பில் சேரும் மாண வர்கள் எண்ணிக்கை குறைந்தது.

இதையடுத்து, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த மார்ச் மாதம் அறி வித்தார். இது தொடர்பாக ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலை யரசன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளி யில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என அந்தக் குழு பரிந்துரை அளித்திருந்தது.

இந்த பரிந்துரையை ஆய்வு செய்த தமிழக அமைச்சரவை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க முடிவெடுத்தது. கடந்த செப்டம்பரில் நடந்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் உள் இட ஒதுக்கீட்டுக்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா, ஆளுநர் ஒப்புதலுக் காக கடந்த செப்.18-ம் தேதி அனுப் பப்பட்டது. கடந்த 5-ம் தேதி ஆளு நரை சந்தித்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத் தினார். அதன்பிறகும் ஆளுநரின் ஒப்பு தல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த வழக்கு விசாரணையின்போது, 'உள் இடஒதுக் கீடு மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்த பிறகே மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும்' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த 20-ம் தேதி டி.ஜெயக்குமார் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து மீண்டும் மசோதா தொடர்பாக வலி யுறுத்தினர். அதேபோல, மசோதா வுக்கு உடனடியாக ஒப்புதல் தரவேண் டும் என கோரி ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அவருக்கு பதில் அளித்த ஆளுநர், 'அரசின் மசோதா எனது பரி சீலனையில் உள்ளது. அதுபற்றி முடி வெடுக்க 3 அல்லது 4 வாரம் அவ காசம் தேவைப்படுகிறது. என்னை சந்தித்த அமைச்சர்களிடம் இதை தெரி வித்துவிட்டேன்' என கூறியிருந்தார்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்ட நிலையில், மசோதாவுக்கு ஒப்பு தல் பெற ஆளுநருக்கு முதல்வர் அழுத் தம் தரவேண்டும் என்று திமுக உள் ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தன. மேலும், மசோதாவுக்கு விரை வாக ஒப்புதல் அளிக்கக் கோரி திமுக சார்பில் ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இதனிடையே, மருத்துவப் படிப்புக் கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங் களுக்கு கலந்தாய்வு தொடங்கியுள் ளது. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் நலன்கருதி அவர் களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக் கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்ப தாவது:

இளநிலை மருத்துவம், பல் மருத் துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, மாண வர் சேர்க்கைக்கான பணிகள் தொடங் கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் அவசரமாக முடிவெடுக்க வேண்டியுள்ளதால், ஆளுநரின் ஒப்புதல் நிலுவையில் உள்ள நிலையில், ஆளுநரின் அதிகாரத் துக்கு நிகரான அரசியலமைப்பு சட்டப்பிரிவு 162-ன் கீழ், மாநிலத்துக் கான சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சத வீதம் உள் இடஒதுக்கீடு அளிப்பதற் கான உத்தரவை வெளியிடுகிறது.

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டில், அனைத்து பிரிவிலும் இந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இந்த 2020-21 கல்வியாண்டு முதல் பின்பற்றப்படும். அனைத்து அரசு மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங் கள், சுயநிதி, சிறுபான்மை மற்றும் சிறுபான்மையில்லாத மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு இந்த உள் ஒதுக்கீடு பொருந்தும்.

மருத்துவக் கல்வி இயக்குநர், கூடுதல் இயக்குநர், இந்திய மருத்துவ இயக்குநர் இது தொடர்பான தேவை யான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து

மதுரை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நடப்பு கல்வியாண்டு முதலே அமல்படுத்த உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன், மாணவர் முத்துக்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் வாதிடும்போது, ''உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க 3 முதல் 4 வார அவகாசம் தேவை என ஆளுநர் தெரிவித்துள்ளார்'' என்றார்.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள் தெரிவித்ததாவது:

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் விரைவாக முடிவெடுக்க வேண்டும். பேரவையில் விவாதம் நடத்தப்பட்டு அவசர மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும்போது முடிவெடுக்க மேலும் அவகாசம் தேவையா?

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் முடிவெடுக்க வேண்டும். இதுபோன்ற சூழல்கள் வராது என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநருக்கு உத்தரவிடவோ, காலக்கெடு விதிக்கவோ முடியாது என்பது நீதிமன்றத்துக்கும் தெரியும். விதிப்படி ஆளுநர் எந்த நீதிமன்றத்துக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, மிக விரைவாக முடிவெடுக்க வேண்டும். அவர் மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்.

கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலும், அரசுப் பள்ளிகளிலேயே பயில்கின்றனர். அவர்களின் நலனுக்காகவே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டாவது மருத்துவக் கல்லூரிகளில் 300 முதல் 400 அரசுப் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கம்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர், அரசு தலைமை வழக்கறிஞர் அவகாசம் கோரியதையடுத்து, விசாரணையை நவ.2-க்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்று இந்த விவாகரத்தில் நல்ல முடிவு தெரியவருமென நீதிமன்றம் நம்புகிறது என தெரிவித்தனர்.

சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு

மேலும் நீதிபதிகள் கூறும்போது, 'நீதிபதிகள் பலர் இடஒதுக்கீடு அடிப்படையில் பணியில் சேர்ந்திருப்பதாக தரமற்ற வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதுதொடர்பாக அரசு தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல கருத்து தெரிவிப்பவர்களுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கிறது. கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி தேச நலனுக்கு எதிராக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.