சென்னை:  தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவு:  தமிழகத்தில் 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட 1.24 கோடி பேர் முற்றிலும் படிக்கவும், எழுதவும் தெரியாதவர்களாக உள்ளனர். முதல் கட்டமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள 3 லட்சம் பேருக்கு வரும் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் எழுத்தறிவு கல்வி வழங்க, பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

‘கற்போம் எழுதுவோம் இயக்கம்’ எனும் பெயரில் இந்தத் திட்டம் வரும் நவம்பர் மாதம் முதல் முற்றிலும் தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், மகளிர் சுய உதவிக் குழு, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள்,

ஆசிரியர்கள், சாரண, சாரணியர், தேசிய மாணவர் படை, கிராம கல்விக் குழு, ஒன்றிய அளவில் சிறப்பாகச் செயல்படும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களைக் கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.வரும் நவ. 23ம் தேதிக்குள் இந்த மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும், குறைந்தபட்சம் 20 பேருக்கு அடிப்படை எழுத்தறிவைப் புகட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற எவரும் இந்தத் திட்டத்தில் இணைந்து தங்களின் கற்பித்தல் சேவையை வழங்கலாம். பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக இவர்களின் விவரங்களை நவ. 11ம் தேதிக்குள் திரட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு கல்வியாண்டில் மே முதல் ஆகஸ்ட் வரை, செப்டம்பர் முதல் டிசம்பர் வரை, ஜனவரி முதல் ஏப்ரல் வரை என மூன்று கட்டங்களாக இந்த மையங்கள் செயல்படும். ஒரு நாளுக்கு 2 மணி நேரம் வீதம் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் நடைபெறும்.