சென்னை : தனியார் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கைக்கான, இரண்டாம் சுற்று பதிவு நேற்று துவங்கியது.இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 8,608 சுயநிதி பள்ளிகளில், 1.16 லட்சம் இடங்களுக்கு, நுழைவு வகுப்பான, எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 'ஆன்லைன்' வழியே மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது.


ஆக., 27 முதல், செப்., 25 வரை, 86 ஆயிரத்து, 318 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, முதல் சுற்றில் மாணவர்கள் விருப்ப பதிவு செய்யாத, 55 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.இந்த இடங்களில் சேர்வதற்கு, இரண்டாம் சுற்று மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது. காலியிடங்கள் விபரம்,சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அறிவிப்பு பலகையிலும், rte.tnschools.gov.in என்ற, இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்களில் சேர, அடுத்த மாதம், 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பங்களின் விபரம், நவ., 11ல் இணையதளத்தில் வெளியாகும் என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்து உள்ளது.