சென்னை: தமிழக அரசின் மாநில வணிக கல்வி பயிலகத்தின் முதல்வர் ரவீந்தரன் வெளியிட்ட அறிவிப்பு: தொழில்நுட்ப கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் சேர்க்கையில் பல பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. அதனை இரண்டாம் கட்ட மாணவ, மாணவியர்கள் சேர்க்கை மூலம் நிரப்பிக்கொள்ள சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்குனரால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை தரமணியில் இயங்கி வரும் மாநில வணிக கல்வி பயிலகம் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ பயில விரும்பும் மாணவ, மாணவியர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தி அரசின் விதிகளுக்கு உட்பட்டு துணை கலந்தாய்வில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். கமர்ஷியல் பிராக்டீஸ் (வணிகவியல்) பாடப்பிரிவு பயிற்றுவிக்கப்படுகிறது. எஸ்சி/எஸ்டி மாணவ, மாணவிகளுக்கு சான்றொப்பமிட்ட சாதி சான்றிதழ் சமர்ப்பித்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். துணை கலந்தாய்விற்கான முதலாம் ஆண்டு பட்டயப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் பெற்று சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 15ம் தேதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.