புதுடில்லி : "இந்த ஆண்டிற்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், வரும், 16ல் வெளியிடப்படும்," என, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார். மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான, நீட் தேர்வு, ஒவ்வொரு ஆண்டும், என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, செப்., 13ல் நடந்தது. தேர்வுக்கு, 15.97 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். எனினும், 13 லட்சம் பேர் மட்டுமே, தேர்வை எழுதினர். இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று வெளியிட்டார். அவர், 'டுவிட்டரில்' வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது:தேசிய தேர்வு முகமை, இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகளை, வரும், 16ல் வெளியிட உள்ளது. இவ்வாறு, அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையே, நீட் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்காக, நாளை தனித் தேர்வு நடத்த, தேசிய தேர்வு முகமைக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. அதற்கான தேர்வு முடிவுகளையும், 16ல் வெளியிட அனுமதிக்கப்பட்டுள்ளது.