சென்னை : பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணை தேர்வுக்கான முடிவுகள், இன்றும், நாளையும்(அக்.,28, 29) வெளியிடப்பட உள்ளன.அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடந்த, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 துணை தேர்வுகளை எழுதிய தேர்வர்கள், தங்களது தேர்வு முடிவை, இன்றும்; பிளஸ் 1 மாணவர்கள், நாளையும் தெரிந்து கொள்ளலாம்.தேர்வர்கள் தங்களின் முடிவுகளை, மதிப்பெண் பட்டியலாக, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதற்கு தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.பத்தாம் வகுப்புக்கு, இன்று காலை, 11:00 மணிக்கும், பிளஸ் 2க்கு, இன்று பிற்பகல், 2:00 மணிக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பிளஸ் 1க்கு, நாளை காலை, 11:00 மணிக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சென்று, நவ., 3 மற்றும், 4ம் தேதிகளில் பதிவு செய்யலாம்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மறுகூட்டல்செய்ய, ஒவ்வொரு பாடத்துக்கும், 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பிளஸ் 2 உயிரியலுக்கு மட்டும், 305 ரூபாய் செலுத்த வேண்டும்.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற, ஒவ்வொரு பாடத்துக்கும், 275 ரூபாய் செலுத்த வேண்டும். மறுமதிப்பீடு தேவை என்றால், முதலில் விடைத்தாள் நகலை பெற்ற பின், மறுகூட்டலா, மறுமதிப்பீடா என, முடிவு செய்து கொள்ளலாம்.விடைத்தாளின் நகலுக்கு விண்ணப்பிப்பவர்கள், அதே பாடத்துக்கு மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்க கூடாது. விடைத்தாள் நகல் வழங்கிய பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். தேர்வு துறை அறிவிக்கும் நாளில், விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.