சென்னை: ஆசிரியர் தினத்தையொட்டி ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்: நல்ல ஆசிரியர்களால், சிறந்த ஒழுக்கம் கொண்ட, கைதேர்ந்த திறமையுடைய, அறிவாற்றல் பெற்ற மனிதர்களை உருவாக்கித்தர முடியும். ஆசிரியரின் மனதுருக்கம், அறியும் தன்மை மற்றும் ஊக்கமளித்தலே வகுப்பிலுள்ள ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. சிறந்த ஆசிரியர்கள் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றால் அது மிகையாகாது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி:  நாட்டின் வருங்கால தூண்களான மாணவ செல்வங்களுக்கு அழிவில்லா கல்விச் செல்வத்தை அளிப்பதோடு, ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய நெறிகளையும் போதித்து, வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றிவரும் ஆசிரியர்களுக்கு இந்நன்னாளில் ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

துணை முதல்வர் ஓபிஎஸ்: இளைய தலைமுறையான மாணவர்களின் சிந்தனை, செயலாற்றலை வளப்படுத்தி, மேம்படுத்தி புதிய உலகத்தை உருவாக்கிட வழி வகை செய்யும் ஆசிரியர்களுக்கு நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி. ஒருவர் கற்கும் கல்வியானது, 7 பிறப்பிற்கும் உதவும் என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவாய் மொழியாகும். ஏழு பிறப்புக்கும் உதவும் கல்வியை கற்றுத்தரும் ஆசிரியர் பெருமக்கள், எவ்வளவு சிறப்பானவர்கள் என்பதை நாம் தெளிவாக உணர முடியும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: அறியாமை இருளை விலக்கி, அறிவு ஒளியை தமிழ்நாடு முழுவதும் பரவச் செய்ய ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். அதேநேரத்தில் அனைவரின் உயர்வுக்கும் காரணமான ஆசிரியர்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கும் வகையில் அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி:  ஆசிரியர்கள் குறையின்றி இருந்தால்தான் அவர்களால் கற்பிக்கப்படும் இந்த உலகமும் குறையில்லாமல் இருக்கும் என்பதால் அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். அதேபோல், ஆசிரியர்களும் கல்வியில் மட்டுமின்றி அணுகுமுறையிலும், வாழ்க்கை நெறிகளிலும் சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: நாட்டின் எதிர்கால செல்வங்களான இளம் பிஞ்சுகளை, மழலையர் பள்ளி முதல் உயர் கல்வி வரையில் கல்வி புகட்டி, வாழ்வியல் பண்பாட்டு நெறிகளை ஊட்டி வளர்த்து, தீயாக சீலர்களாக அர்ப்பணிப்புடன் பணிபுரிபவர்கள் ஆசிரியர்கள். சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வரும் ஆசிரியர் சமுதாயத்திற்கு மதிமுக சார்பில் வாழ்த்துகள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: பல மாணவர்கள் நல்ல ஆசிரியர்களிடம் பயின்ற காரணத்தால் பல்வேறு நிலைகளில் உயர்ந்து சாதனைகள் படைத்துள்ளனர். அதற்கு உந்து சக்தியாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆசிரியர் தின வாழ்த்துகள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மாணவர்களின் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் உன்னதப் பணியில் தங்களை அர்பணித்துக்கொண்டு பணியாற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு என் உள்ளம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துகள்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: ஆசிரியர் பணி என்பது வெறுமனே எழுத, படிக்க சொல்லித்தருவது மட்டுமல்ல; ஒழுக்கம், உயர்ந்த பண்புகள், சமூக அக்கறை உட்பட நல்ல மனிதனுக்கு தேவையான குணங்களையும் மாணவர்கள் மனதில் விதைத்து, வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியப் பெருமக்களுக்கு இருக்கிறது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்: பாடத்திட்டம் மட்டுமன்றி பண்பு, நல்லொழுக்கம், ஊக்கம், திறன் வளர்ப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு என கற்பித்து மாணவர்களை நல்வழிப்படுத்தி வரும் ஆசிரியப்பெருமக்கள் மனித சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என்றால் மிகையாகாது.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்: மாணவர்கள் தொடர்ந்து தங்களுடைய அறிவை வளர்ப்பதில் ஆசிரியர்கள் உந்துசக்தியாக இருப்பதோடு முறையான வழிகாட்டியாகவும் திகழ்கிறார்கள்.
சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் நாராயணன்: ஒரு நல்ல ஆசிரியரால் தான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். அனைத்து மாணவர்களுக்கும் தங்களின் கற்பித்தல் பணிகளை அயராது அளிக்கும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கு நல்வாழ்த்துகள்.

ஆசிரியர்களுக்கு திமுக என்றைக்குமே பாதுகாப்பு அரணாகத் திகழும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி:  வகுப்பறைகளில் தங்கள் வாழ்நாளைக் கழித்து-ஓய்வு பெற்ற பிறகும் கூட நல்லொழுக்கம், பண்புகளைப் போற்றி வளர்க்கும் சமுதாயத்தை உருவாக்குவதில் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர்கள் ஆசிரியர்கள். அதனால் தான் அந்த ஆசிரியர் பெருமக்களுக்கு ஆட்சியிலிருந்த போதெல்லாம் திமுக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தியிருக்கிறது.

திமுக ஆட்சியில் தான் ஆசிரியர்  பெருமக்களுக்கு  உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் அளிக்கப்பட்டது. மேலும் பல முத்தாய்ப்பான சலுகைகளை ஆசிரியர்களுக்கு வழங்கியது திமுக அரசு. ஆசிரியர் சமுதாயத்திற்காகவும், அவர்களின் நலத்திட்டங்கள் மற்றும் உரிமைகளுக்காகவும் என்றைக்குமே  திமுக பாதுகாப்பு அரணாகத் திகழும். ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.