சென்னை:'இந்த மாதம் நடக்க உள்ள, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 துணை தேர்வு எழுதும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இந்த மாதம் நடக்க உள்ள, துணை தேர்வு மற்றும் தனி தேர்வுகளில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் முக கவசம் பயன்படுத்துவதற்கு இயலாத நிலையில், அது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மாற்றுத்திறனாளி தேர்வர்கள், கொரோனா பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.எட்டாம் வகுப்பு தனி தேர்வு, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வுகள், தொடக்க கல்வி டிப்ளமா தேர்வு ஆகியவற்றை எழுதவுள்ள, மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கும்; அவர்களுக்கு சொல்வதை கேட்டு எழுத நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கும், தேர்வு மையத்துக்கு செல்லும் முன், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இந்த தகவலை, அந்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், முதன்மை கல்வி அலுவலர்கள் போனில் தெரிவிக்க வேண்டும். அதில், சிரமம் இருந்தால், வரும், 15ம் தேதிக்குள், முதன்மை கல்வி அலுவலகத்தில், அவர்கள் தகவல் அளித்தால், சோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப் படும்.தேர்வு மையத்துக்கு வரும் போது, கொரோனா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழை எடுத்து வர வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.