சென்னை : புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்க, உயர் கல்வித் துறை சார்பில், குழு அமைக்கப்பட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சமீபத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்டது. இதில், 'பள்ளி மாணவர்களுக்கு, தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன், மூன்றாவதாக ஏதேனும், ஒரு மொழியை கற்பிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, தமிழக அரசு ஏற்கவில்லை. தேசிய கல்விக் கொள்கையின், மற்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, குழு அமைக்கப்படும் என்றும், தமிழக அரசு அறிவித்தது.அதன்படி, உயர் கல்வித் துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில், ஏழு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்களாக, சென்னை பல்கலை முன்னாள் துணை வேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி; மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணை வேந்தர் பிச்சுமணி; அழகப்பா பல்கலை துணை வேந்தர் ராஜேந்திரன்; மதுரை காமராஜ் பல்கலை துணை வேந்தர் கிருஷ்ணன்; திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் தாமரைசெல்வி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இக்குழு, தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்கும். இதேபோல், பள்ளி கல்வித் துறை சார்பில், தனி குழு அமைக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.