குஜராத் மாநிலத்தில் கரோனா பரவல் காரணமாக தற்போதைய நிலையில் பள்ளிகள் திறக்கப்படாது என மாநில கல்வித்துறை அமைச்சர் பூபேந்திரசிங் புதன்கிழமை தெரிவித்தார்.


கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் மாநிலங்களின் கரோனா பரவல் பாதிப்பு நிலைகளுக்கேற்ப செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி முதல் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மட்டும் (9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை) பள்ளிகளைத் திறந்து கொள்ளலாம் என மத்திய அரசு வழிகாட்டுதலை வழங்கி இருந்தது.


இதனைத் தொடர்ந்து கரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி முதல் மாநிலத்தில் பள்ளிகளைத் திறக்கப் போவதில்லை என மாநிலக் கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் தெரிவித்துள்ளார்.


“செப்டம்பர் 21 முதல் மத்திய அரசின் வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துவது கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் மாணவர்கள் ஒரே இடத்தில் கூடுவது வைரஸ் பாதிப்புக்கு வழிவகுக்கும். ”என அமைச்சர் பூபேந்திரசிங் தெரிவித்தார்.


மேலும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் அதுவரை இணையவழி வகுப்புகள் நடைபெறும் எனவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.


DINAMALAR