பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உரிமை அளித்துள்ளதால், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் நடத்த விரும்பினால் நடத்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்குத் தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்ச்சியும் அறிவிக்கப்பட்டது. முதல் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


எனினும் யுஜிசி அமைப்பு கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர்களை ரத்து செய்ய மறுத்துவிட்டது. கட்டாயம் நடத்தியே ஆகவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் தெரிவித்துவிட்டது. இதனால் செப்டம்பருக்குள் தேர்வை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த ஆயுஷ் யேசுதாஸ் முதலாவது மற்றும் இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகளை நடத்துவதற்கு எதிரான பொதுநல மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், ''தேர்வுகளை நடத்திக்கொள்ள பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி வழிகாட்டு நெறிமுறைகளையும் உரிமையையும் அளித்துள்ளது. இதனால், முதலாவது மற்றும் இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகளை நடத்த விரும்பினால் பல்கலைக்கழகங்கள் நடத்திக் கொள்ளலாம். எனினும் இதுகுறித்து உத்தரவு எதையும் பிறப்பிக்க விரும்பவில்லை. தேர்வுகள் ரத்து செய்யப்படுவதால் அவர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.

மேலும், தேர்வுகளை நடத்தும்போது கட்டாயம் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், யுஜிசி தேர்வு விதிகளுக்கு உட்பட்டு முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தலாம் என்று தெரிவித்து, பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்தனர்.