சென்னை:அண்ணா பல்கலையில், நவம்பர் செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் செலுத்த, வரும், 19ம் தேதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், நவம்பர் மாத செமஸ்டர் தேர்வுக்கு, ஆக., 31க்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என, நிபந்தனை விதிக்கப் பட்டது. பின், செப்., 2க்குள் செலுத்த வேண்டும் என்றும், அதன்பின் அபராதத்துடன், செப்.,5ம் தேதியான இன்றைக்குள் செலுத்த வேண்டும் என, கால அவகாசம் அறிவிக்கப்பட்டது. உரிய காலத்தில் கட்டணம் செலுத்தாதவர்களின் பெயர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்படும் என, பல்கலை சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.இந்நிலையில், செமஸ்டர் தேர்வு கட்டணத்துக்கு கூடுதல் அவகாசம் வழங்குவது மற்றும் சுற்றறிக்கையை ரத்து செய்வது தொடர்பாக, மாணவர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, வரும், 19ம் தேதி வரை கட்டணத்தை செலுத்தலாம் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.