சென்னை : 'இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு, வரும், 22ம் தேதி முதல், ஆன்லைனில் நடத்தப்படும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் மற்றும் கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சஞ்சீவி ஆகியோர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில், 2019 டிசம்பர் - 2020 ஏப்ரல் காலத்துக்கான, இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கு, வரும், 22ம் தேதி முதல், 29ம் தேதி வரை தேர்வு நடத்தப்பட உள்ளது.

'ஆன்லைனில்' பங்கேற்கலாம்அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களும், இந்த செமஸ்டர் தேர்வை, வீட்டில் இருந்தே, 'ஆன்லைனில்' பங்கேற்கலாம்.'லேப்டாப், கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன், டேப்லெட்' ஆகிய, ஏதாவது ஒரு வகை கருவிகள் வழியாக, 'கேமரா, மைக்ரோபோன்' வசதிகளுடன், இணையதளத்தை பயன்படுத்தி தேர்வில் பங்கேற்கலாம். தேர்வை பொறுத்தவரை, சரியான விடையை தேர்ந்தெடுக்கும், 'மல்டிபிள் சாய்ஸ்' வகை வினாக்களாக இருக்கும். இதற்கான மாதிரி தேர்வு, முதலில் நடத்தப்படும்.

அதிகாரப்பூர்வ அனுமதி'ஆன்லைன்' தேர்வு துவங்குவதற்கு, ஒரு வாரம் முன்போ அல்லது அதற்கு முன்னதாகவோ, மாதிரி தேர்வும், ஆன்லைன் தேர்வுக்கான வழிமுறைகளும் அறிவிக்கப்படும். அண்ணா பல்கலையின் இணையதளத்தில், இந்த அறிவிப்பு வெளியாகும். தேர்வுக்கான பாடவாரியான கால அட்டவணையும், விரைவில் வெளியாகும். ஆன்லைன் வழி தேர்வுக்கு உரிய அதிகாரப்பூர்வ அமைப்பிடம், அனுமதி பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்ததும், தேர்வு விபரங்கள் வெளியாகும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

பல்கலை அறிவிப்புநேரடியாக நடத்தப்படும் தேர்வுகளில், பல்வேறு முறைகேடுகள் ஏற்படும் நிலையில், முதல் முறையாக கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை, தேர்வு மையம் போன்ற எதுவும் இல்லாமல், அவரவர் வீட்டில் இருந்தே தேர்வு எழுதும், ஆன்லைன் தேர்வு முறையை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.இந்த தேர்வு முறையில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.இந்த தேர்வு திட்டமிட்டபடி, எந்த பிரச்னையுமின்றி, முறைகேடுகளுக்கு வழியின்றி நடந்து விட்டால், வரும் காலங்களில் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், ஆன்லைன் தேர்வை பின்பற்ற வாய்ப்புள்ளது.