இந்தியாவின் 5 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கரோனா பொதுமுடக்கக் காலத்தில் 80 சதவிகிதமான அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தகைய முறையிலும் கல்வியையும் பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிக் கல்வியைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் பலரும் இணைய வழிக் கல்வியைக் கூட முறையாகப் பெற முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கரோனா பொதுமுடக்கக் காலத்தில் பள்ளிக் கல்வி குறித்து ஆக்ஸ்பாம் அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதன்படி குறிப்பிட்ட 5 மாநிலங்களில் 80 சதவிகித அரசுப் பள்ளி மாணவர்கள் எந்தவகையிலும் தங்களது பள்ளிக்கல்வியைத் தொடர முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்தில் இரண்டு ஆசிரியர்களுக்கு இணைய வழிக் கல்வியை மேற்கொள்வதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், 20 சதவிகித அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே இணையவழிக் கல்வியைக் கற்பிப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் பொதுமுடக்கக் காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதை உறுதி செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், ஐந்து மாநிலங்களிலும் 65 சதவீத மாணவர்கள் மட்டுமே மதிய உணவைப் பெற்றுள்ளனர். அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் 50 சதவிகித பெற்றோர்கள் வழக்கமானக் பள்ளிக்கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.