சென்னை:'கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, இலவச மாணவர் சேர்க்கைக்கு, வரும், 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர், கருப்பசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.


ஒவ்வொரு பள்ளியிலும், நுழைவு நிலை வகுப்பில், இந்த சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஆக., 27ல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது.வரும், 25ம் தேதி வரை, rte.tnschools.gov.in என்ற, இணையதளத்தின் வழியே விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பரிசீலனைக்கு பின், 30ம் தேதி மாலை, 5:00 மணிக்கு விண்ணப்பங்களின் விபரங்கள், பள்ளிகளின் தகவல் பலகையில் வெளியிடப்படும்.


நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட, கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால், அக்., 1 முதல் குலுக்கல் நடத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வாகும் மாணவர்கள், அக்., 7க்குள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சேர வேண்டும்.அக்டோபர், 7 நிலவரப்படி சேர்க்கை முடிந்த இடங்கள் போக, மீத இடங்கள் இருந்தால், அவை, நவ.,15 வரை காலியாக வைக்கப்பட்டிருக்கும். அதை நிரப்புவது குறித்து, பின்னர் அறிவிப்பு வெளியாகும்.இதுகுறித்து புகார்கள் இருந்தால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மெட்ரிக் இயக்குனர் தலைமையிலான குழுவிடம் தெரிவிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.