மதுரை,:புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 22ல் ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்துள்ளது.


குழு ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்செல்வி, ஜனார்த்தனன் மதுரையில் கூறியதாவது: கடந்த, 2016ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை அடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில், 110 விதியின் கீழ், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.அவரது வழியில் ஆட்சி செய்வதாக கூறும் முதல்வர், இ.பி.எஸ்., உடனடியாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.


ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு, முறையான காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., ௨௨ல் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.