21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப புதிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்படும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆளுநர்கள் மாநாடு காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொணடு உரை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராம்நாத் கோவிந்த், புதிய கல்விக் கொள்கையை மாநிலங்களில் அமல்படுத்த அது சார்ந்த மாநாடுகளை நடத்த ஆளுநர்களை கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.

புதிய கல்வி கொள்கையின் பல்வேறு கூறுகளைப் பற்றி விரிவாக ஆலோசித்தப் பிறகு, கருத்துக்களை கல்வி அமைச்சகத்துக்கு அனுப்பலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்திய மொழிகள், கலை மற்றும் கலாச்சாரத்துக்கு தேசிய கல்வி கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ள ராம்நாத் கோவிந்த், படைப்பாற்றலை மாணவர்களிடயே இது மேம்படுத்தும் என தெரிவித்தார். நீண்ட நொடிய ஆலோசனைகளுக்கு பிறகு புதிய கல்விகொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய இளைஞர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்ய தேசிய கல்வி கொள்கை உதவும் என்றார்.