திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வு வரும் 21-ம் தேதி தொடங்கவுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் சே. சந்தோஷ்பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்றுள்ள கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதிப்பருவத்துக்கு ஏப்ரல் 2020-ல் தேர்வுக்கு உரிய முறையில் விண்ணப்பித்த நடப்பு மற்றும் தனித்தேர்வர்களுக்கு வரும் செப்டம்பர் 21-ம் தேதியிலிருந்து பருவ தேர்வுகள் நடைபெறவுள்ளது.

முதுநிலை மற்றும் இளநிலை அறிவியல் மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரையிலும், இளநிலை கலை மற்றும் இளநிலை வணிகவியல் மாணவர்களுக்கு மதியம் 3 மணி முதல் 5 மணிவரையிலும் அவர்கள் பயின்ற கல்லூரிகளிலேயே தேர்வுகள் நடைபெறும்.
இறுதிப்பருவ எழுத்து தேர்வு எழுத வேண்டிய எம்.பில் (ஆய்வியல் நிறைஞர்) மாணவர்களுக்கு செப்டம்பர் 23-ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணிவரையிலும் தேர்வுகள் நடைபெறும்.

மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரிகளில் நேரில் வந்து தேர்வு எழுத இயலாதபட்சத்தில் மாணவர்கள் வசிக்கும் இருப்பிடங்களின் அருகில் உள்ள பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் தேர்வு எழுத ஆவன செய்யப்படும். இப்பல்கலைக்கழக அங்கீகாரத்துக்கு அப்பாற்பட்ட வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் நேரில் வந்து தேர்வு எழுத இயலாதபட்சத்தில் இணையதளம் மூலமாகவோ அல்லது பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யும் ஏதேனும் ஒரு தேர்வு மையத்திலோ தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இப்பல்கலைக்கழக எல்லைக்கு உட்பட்ட வேறு ஏதேனும் கல்லூரிகளில் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களும் இணையதளம் மூலம் அல்லது வேறு மாவட்ட, மாநில மையங்களில் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களும் தாங்கள் பயின்ற கல்லூரியின் முதல்வரை உடனடியாக தொடர்பு கொண்டு தங்கள் பெயரை 10.9.2020-க்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும். கல்லூரி முதல்வர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் மட்டுமே மாற்று ஏற்பாடு செய்யப்படும்.

ஏப்ரல் 2020-ல் தேர்வு கட்டணம் செலுத்திய இளநிலை இரண்டாம் மற்றும் நான்காம் பருவ மாணவர்களின் தேர்வு முடிவுகளும், முதுநிலை இரண்டாம் பருவ மாணவர்களின் தேர்வு முடிவுகளும் அரசு ஆணையின்படி பல்கலைக்கழக இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டு, மாணவர்களின் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டுள்ளது.

இளநிலை ஒன்று முதல் ஐந்து பருவங்கள் வரை மற்றும் முதுநிலை ஒன்று முதல் மூன்று பருவங்கள் வரை தவறிய பாடங்களுக்கான மாணவர்களின் தேர்வு முடிவுகள் அரசின் வழிகாட்டுதலுக்கு இணங்க பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.