சென்னை:'வரும், 21ம் தேதி முதல், ஆன்லைன் வகுப்பு களை நடத்தக் கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும், அவற்றில் இருந்து மாணவ - மாணவியரை காப்பாற்றவும், அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படாமல், மாணவர்களை வீட்டில் இருந்தே படிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி, 'டிவி' வழியாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழியாகவும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில், காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படும். இந்த ஆண்டு, செப்., 21 முதல், 25 வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடத்தப்படா விட்டாலும், ஆன்லைன் வகுப்புகளால், மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருப்பர். அதை குறைக்கும் வகையில், இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி, வரும், 21ம் தேதி முதல், கல்வி, 'டிவி'யில் பாடங்கள் நடத்துவதற்கு பதில், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.அதேபோல், தனியார் பள்ளிகளும், வரும், 21 முதல், ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும்; 26 முதல் நடத்தி கொள்ளலாம் என, பள்ளி நிர்வாகிகளுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.