சென்னை:அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், 20 சதவீத மாணவர்களை கூடுதலாக சேர்க்க, உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து, உயர் கல்வித் துறை முதன்மை செயலர், அபூர்வா பிறப்பித்துள்ள அரசாணை:கடந்த, 2019 - 20ம் கல்வி ஆண்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், வழக்கத்தை விட, 20 சதவீதம் கூடுதலாக, மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டது.


இந்த ஆண்டும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர, பிற்படுத்தப்பட்ட மற்றும்பழங்குடியின மாணவர்கள், அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர்.எனவே, அவர்களின் நலன் கருதி, தேவையான பாடப்பிரிவுகளில், 20 சதவீதம் கூடுதலாக, மாணவ - மாணவியரை சேர்க்க, கல்லுாரி கல்வி இயக்குனர் அனுமதி கேட்டுள்ளார்.


அதன்படி, கூடுதல் மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட கல்லுாரிகள், கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு, இணைப்பு பெற்றுள்ள பல்கலைகளில், அனுமதி பெற வேண்டும்.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.