சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 14ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதாக பரவி வரும் தகவல் தவறானது தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக மாநில அரசு தனியாக அறிவிப்பு வெளியிட்டாலும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே பெரும்பாலும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி நாடு முழுவதும் அன்லாக் 4 தொடர்பான வழிகாட்டுதல்கள் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இதில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திடீரென சமூக வலைதளங்களில் செப்டம்பர் 14ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக ஒரு செய்தி வெளியானது. அதேபோல் அக்டோபர் 1ம் தேதி முதல் திரையரங்குகளில் திறக்கப்படும் என்ற தகவல்கள் மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் இந்த தகவல்களை செய்தித்துறை மறுத்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 14ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்ற தகவல் தவறானது என்றும் அக்டோபர் 1ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கும் படம் என்ற தகவல் தவறானது என்றும் செய்தித்துறை விளக்கமளித்துள்ளது. பள்ளி கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறக்கப்படும் தேதி குறித்து தமிழக அரசு முறையான அறிவிப்பு வெளியிடும் என்றும் செய்தித்துறை விளக்கமளித்துள்ளது.